காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவர் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நன்றாக ஜெபித்த பின்னரே ஆரம்பிப்பது வழக்கம். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் ஜெபத்திலும் , வேதவாசிப்பிலும் நேரத்தை செலவிடுவார் .
இதை சிறுபிராயம் முதலாகவே கண்டு வளர்ந்த அவரது மகனுக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
“அப்பாவைக் கண்டால் ஊரே மதிக்கிறது. அவர் கட்டளையிட்டால் செய்து முடிக்க ஆயிரம் அதிகாரிகள் உண்டு. அவரைக் கண்டு பயப்படுகிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருந்தும் அவர் இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தொட்டதற்கெல்லாம் ஜெபிப்பது அவரது தன்னம்பிக்கையின்மையக் காட்டுவது போலில்லையா? அவரது பதவியும், புத்திசாலித்தனமும்தானே அவரது வெற்றிக்குப் பின்புலமாய் அமைவது?” இந்தக் கேள்வி மனதுக்குள் இருந்தாலும் அவரிடம் நேரடியாகக் கேட்டதில்லை.
அவனையும் அவர் நல்ல தேவபக்தியுடனும், ஒழுக்கத்துடனுந்தான் வளர்த்திருந்தார். இருந்தாலும் தொடர்ந்து குவியும் வெற்றிகளும், செல்வச் செழிப்பும், வாலிப வயதும் அவனை இப்படி நினைக்கத் தூண்டியது.
ஒரு நாள் தைரியமாய் அப்பாவிடம் இதுபற்றிக் கேட்டுவிட்டான். அப்பா கோபப்படவில்லை. சிரித்தபடியே அவன் தோளில் கைபோட்டு இறுக்கிக் கொண்டார், பதில் சொல்லவில்லை.
அன்று மாலை அவனை தாம் பயிற்சி செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவனுடைய கையில் ஒரு தோட்டாவை எடுத்துக் கொடுத்தார். அது பயன்படுத்தப் படாத உயர் திறன் வாய்ந்த தோட்டா. அதைப் பற்றி ஏற்கனவே அவர் அவருக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்.
தோட்டாவைக் கொடுத்துவிட்டு அவனிடம் கேட்டார்,
” மகனே! இதன் சக்தி உனக்குத் தெரியுமா? ”
அவன் சொன்னான்,
“இது மிகுந்த சக்தி வாய்ந்தது அப்பா. இதைக் கொண்டு தூரத்தில் நின்று கொண்டிருக்கும் யானையைக்கூட வீழ்த்திவிடலாம்”.
அப்பா பையிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து ஒரு குத்துக் கல்லின் மேலே எடுத்து வைத்தார். அவனைப் பார்த்து சொன்னார்,
“நீ அந்தத் தோட்டாவைக் கொண்டு யானையை வீழ்த்த வேண்டாம். இந்த ஆப்பிளை வீழ்த்து பார்க்கலாம் ” .
மகனுக்கு ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் தோட்டாவை அதன்மீது வீசிப்பார்த்தான் . அது ஆப்பிளின் மீது படக்கூட இல்லை .
அப்பா மீண்டும் அவன் தோளில் கைபோட்டுக் கொண்டு சொன்னார். “சக்தி வாய்ந்த தோட்டாதான். பெரிய மிருகத்தையும் வீழ்த்தக் கூடியதுதான். இருந்தாலும் துப்பாக்கியிலிருந்து புறப்படாததால் அதனால் ஒரு சிறிய ஆப்பிளைக்கூட வீழ்த்த முடியாமல் போனது. எவ்வளவுதான் திறமையும் , வலிமையும் இருந்தாலும் , கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து புறப்பட்டாவிட்டால் ஒரு சிறு காரியத்தில்கூட ஜெயம் எடுக்க முடியாது . துப்பாக்கி இல்லாவிட்டால் தோட்டா என்பது பயனில்லாத ஒரு உலோகத்துண்டுதான். ஜெபம் இல்லாத முயற்சியும் அப்படித்தான் ” என்றார்.
இப்போது மகனுக்குப் பெருமையாக இருந்தது, அவர் பெரிய அதிகாரி என்பதைவிட, அவர் நல்ல ஜெபவீரர் என்பதில் .
செல்லமே ! நீயும் வலிமை வாய்ந்த தோட்டாதான், ஜெபம் என்ற துப்பாக்கியில் இருந்து புறப்படும்போது.
“கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன், தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார் ” சங்கீதம் 20:6
2 கருத்துகள்
Best explanation
பதிலளிநீக்குNice 👍 story
பதிலளிநீக்குஉங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்